விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான இராஜம்மாள் பட்டாசு ஆலை சிப்பிபாறையில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
இன்று காலை வழக்கம்போல 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயார் செய்யும்போது பட்டாசு மருந்துகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள அறைகள் அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்தன. ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த தென்காசி மாவட்டம் மைப்பாறையைச் சேர்ந்த இராணி (42), ஜெயபாரதி (45), பத்ரகாளி (33), வேலுத்தாய் (34), தாமரைச்செல்வி (32), தங்கம்மாள் (39), முருகைய்யா (49) ஆகிய ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சுப்பிரமணியன், பொன்னுத்தாய், சுப்பம்மாள், அய்யம்மாள், மாடசாமி, பேச்சியம்மாள், முருகலட்சுமி, ஜெயராம் ஆகிய 8 பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.