கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த சீனிவாசன் - கீதா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்த சுரேஷ் (20), தற்போது சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு மைக்ரோபயாலஜி படித்துவருகிறார். இவரது தந்தை ஈரோடு பக்கம் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாக வேலை பார்த்து வருகிறார். தயார் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
நடுத்தர வர்க்கத்தில் பிறந்த இவர் சேலம் தனியார் கல்லூரியில் படிக்கும்போது தனது ஆசிரியர் ஹரிஹரனின் அறிவுறித்தலின் பெயரில் மல்யுத்தம் பயிற்சிப் பெற்றார். ஐந்தே மாதங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசை வென்ற அவர், நவம்பர் 21 முதல் 24ஆம் தேதிவரை ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
இது குறித்து அவர் நமது ஈடிவி பாரத்திற்கு பிரேத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் பேசியதாவது,
"சேலம் தனியார் கல்வியியல் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு மைக்ரோபயாலஜி படித்து வருகிறேன். அங்கு எனது ஆசிரியர் ஹரிஹரன் மூலமாகதான் இந்த மல்யுத்த போட்டி எனக்கு தெரியும். நான் இந்த அளவிற்கு வளர அவரது அன்பு, அரவனைப்பு முயற்சி இவையெல்லாம் தான் காரணம். மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளை வென்று தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 வீரர்கள் இதில் கலந்துகொண்டனர். அதில், நான் இரண்டாம் இடம் இடத்தை பிடித்ததால், தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற முடிந்தது.
கள்ளக்குறிச்சியில் மல்யுத்தம் பயிற்சிபெற பொதுமான இடவசதிகள் இல்லை. இதனால், ஈரோடு சென்று ஒரு மாதக்காலம் பயிற்சிபெற்று வந்தது மிகவும் கடினமாக இருந்தது. ஒருபக்கம் தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், மறுபக்கம் கள்ளக்குறிச்சியில் மல்யுத்தம் பயிற்சிபெற பொதுமான வசதி இல்லாத சூழலில் வெள்ளி வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் மல்யுத்ததிற்கு தமிழ்நாடு அரசு பொதுமான வசதிகளை செய்துகொடுத்தால் நிச்சயம் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வெல்வேன்" கூறினார்.
மேலும், எனக்கு வெளிநாட்டிற்கு செல்ல அழைப்பு வந்தது. ஆனால் அதற்கான பொருளாதார வசதி எங்களிடம் இல்லை என்பதால் அதனை மறுத்து விட்டேன் என மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து, சுரேஷின் தாய் கீதா கூறுகையில்,
"மல்யுத்தத்தில் பயிற்சி பெற அவன் கள்ளக்குறிச்சியிலிருந்து ஈரோடு செல்ல 5 மணி நேரம் ஆகும். சொந்த செலவில்தான் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கும் செலவையும் நாங்கள் செய்துவருகிறோம். அவனிடம் திறமை இருந்தும், பொருளாதார வசதி இல்லை என்பதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே, கள்ளக்குறிச்சியில் மல்யுத்தம் பயிற்சிபெற தமிழ்நாடு அரசு பொதுமான வசதிகளை செய்துதர வேண்டும். மேலும் எனது மகனவும் அரசாங்கம் நிதியுதவி செய்து தர வேண்டும்" என வலியுறித்தியுனார்.
கள்ளக்கிறிச்சியில் சுரேஷை போன்று மல்யுத்தப் போட்டியில் சாதிக்க துடிக்கும் பலருக்கும், தமிழ்நாடு அரசு பொதுமான இடவசதிகளும், பயிற்சியாளரையும் வழங்கினால் நிச்சயம் அவர்கள் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பர்.