விழுப்புரம் அருகே உள்ள பனையபுரத்தைச் சேர்ந்தவர் லியோபால். இவருடைய மனைவி சுசித்தாமேரி. காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி லியோபால் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மாயமான லியோபாலை அவரது பெற்றோரும், உறவினர்களும் தேடிவந்தனர். இந்தச் சூழலில் கடந்த 21ஆம் தேதி சுசித்தாமேரியும் மாயமானார்.
இது தொடர்பாக அவரது தந்தை கடந்த 23ஆம் தேதி சகாயராஜ் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்துவந்தனர்.
இதில் தலைமறைவான சுசித்தாமேரிக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் திருமண பந்தத்துக்கு வெளியேயான உறவு இருந்தது தெரியவந்தது.
மேலும், லியோபால் வீட்டின் பின்புறம் துர்நாற்றம் வீசிவருவதாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில், வீட்டின் பின்புறத்தில் காவல் துறையினர் தடயவியல் வல்லுநர்கள், மருத்துவர்கள் முன்னிலையில் சோதனை செய்தனர்.
இதில் மாயமான லியோபாலின் உடல் புதைக்கப்பட்டது தெரியவந்தது. தோண்டி எடுக்கப்பட்ட உடலை அங்கேயே மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்துவருகின்றனர். தொடர்ந்து, தலைமறைவான சுசித்தாமேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண் மென்பொறியாளர் மீது தாக்குதல்