விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த கானை, திருவெண்னைநல்லூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இரசு நேரங்களில் தனியாக செல்வோரைத் தாக்கி இருசக்கர வாகனம், பணம், செல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக குவிந்த புகார்களின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இரவில் சந்தேகம்படும்படியாக சுற்றித் திரிந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர்கள் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையைச் சேர்ந்த மணிகண்டன், பாலாஜி, மலர்ராஜ், கஸ்பகாரணை பகுதியைச் சேர்ந்த சிலம்பு மற்றும் கோனூரைச் சேர்ந்த மதியழகன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் ஐந்து பேரும் இரவு நேரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத சாலைகளில் தனியாக செல்வோரை உருட்டு கட்டைகளால் தாக்கி இருசக்கர வாகனம், பணம் மற்றும் செல்ஃபோன் ஆகியவற்றை கொள்ளையடிப்பது தெரியவந்தது. பின்னர் இவர்களிடமிருந்து மூன்று பைக்குகள், நான்கு செல்ஃபோன்கள், மற்றும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.