கடந்த 2016ஆம் ஆண்டு விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 180 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிப்பாதையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதன்படி, மூன்றுகட்ட பணிகள் முடிவடைந்து நான்காம்கட்ட பணிகளுக்காக சட்டநாதபுரம்-நாகப்பட்டினம் இடையே நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமல், ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதாகவும், விவசாய மற்றும் வனப்பகுதிகளின் வழியாக அமைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்கவேண்டுமெனவும் பண்டாரிநாதன், டிராபிக் ராமசாமி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பண்டாரிநாதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு 63% விவசாய மற்றும் வனப்பகுதி கையகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம்கட்ட தேசிய நெடுஞ்சாலை விவரிப்பு பணிகளுக்காக சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையடுத்து நடைபெற்ற வாதங்களை முன்வைத்து சாலை விவரிப்பு, நில ஆக்கிரமிப்பு பணிகளுக்காக சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெறப்பட்டதா? என மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.