விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளி இளைஞர்கள் ஆகியோரிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.
குறிப்பாக, பத்தாம் வகுப்பு (தேர்சி பெறாதவர்களும் இதில் அடங்குவர்) மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்த பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வந்தால் 31.01.2020 தேதிப்படி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையினை இரு மடங்காக உயர்த்தி மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு (தேர்ச்சி பெறாதவர்கள்) 200 ரூபாய், பத்தாம் வகுப்பு (தேர்ச்சி பெற்றோருக்கு) 300 ரூபாய், மேல்நிலைக் கல்வித் தேர்ச்சிக்கு 400 ரூபாய், பட்டப்படிப்புக்கு 600 ரூபாய் என்று வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2020 பிப்ரவரி 28ஆம் தேதி வரை, அனைத்து அலுவலக வேலை நாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதையடுத்து, விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் தாய் பால் வங்கி தொடக்கம்..!