கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள பொய்குணம் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு மேஸ்திரியாக பணி செய்யும் முனுசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு 40 தொழிலாளர்களுடன் புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் நிலத்தில் விளைந்திருந்த கரும்பினை வெட்டச் சென்றிருந்தார்.
அப்போது கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கும், பக்கத்து நிலத்தின் உரிமையாளர் தங்கராஜ் தரப்புக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தங்கராஜ் தரப்பினர் சாதி பெயரை சொல்லி தொழிலாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தங்கராஜ் உள்பட 17 பேர் மீது சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் எஸ்டி, எஸ்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், நேரில் ஆஜராகி விளக்மளிக்குமாறு அப்போதைய விசாரணை அதிகாரியான விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
அதனைத் தொடர்ந்து அவர், நேற்று மாலை நீதிபதி எழில் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். இதையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையை வருகிற 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.