உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டில் பொது இடங்களில், அரசு சுவர்களில் விளம்பரம் வரைவதற்கு, பதாகைகள் வைப்பதற்கும், தனியார் இடங்களில் அனுமதியின்றி விளம்பரம் எழுதவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மேம்பால சுவர்கள், அரசு அலுவலக சுவர்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சியினர் விதிகளை மீறி விளம்பரம் செய்துவருகின்றனர்.
விரைவில் வரவுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ஆம் தேதியும் அக்கட்சியினரால் கொண்டாடப்படவுள்ளது.
இதற்காக மாவட்ட அதிமுக, திமுக சார்பில் நகரின் பல இடங்களிலும், நெடுஞ்சாலையோர சுவர்களிலும் விளம்பரங்கள் வரையப்பட்டுவருகிறது. இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்தச் சுவரில் விளம்பரங்கள் எழுதும் பிரச்சனையில் அவ்வப்போது திமுக, அதிமுகவினரிடையே சண்டை ஏற்படுகிறது.
எனவே, பொது இடங்களில் விளம்பரம் எழுவதற்கு நிரந்தர தடைவிதிக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் அளித்த உறுதி; போராட்டத்தைக் கைவிட்ட ராமதாஸ்! - போன் உரையாடலில் பேசியது என்ன?