ஜிப்மர் மருத்துவமனையின் கரோனா வார்டை தரம் உயர்த்த வேண்டும் எனக்கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில், "நமது நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக ஜிப்மர் மருத்துவமனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையின் இயக்குநர் அளித்த தகவலின்படி அங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 250 படுக்கைகள் கொண்ட வார்டு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜிப்மர் மருத்துவமனையில் விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இப்போது ஒவ்வொரு நாளும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகின்ற காரணத்தால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க முடியாமல் ஜிப்மர் மருத்துவமனை திணறி வருகிறது.
எனவே, உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டை ஆயிரம் படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அங்கு செயல்பட்டு வரும், கரோனா நோய்தொற்று பரிசோதனை நிலையத்தில், நாளொன்றுக்கு ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் விதமாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.