விழுப்புரம்: தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் முதல் புத்தகத் திருவிழா, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த திருவிழாவை மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் இணைந்து 25-03-2023 அன்று துவக்கி வைத்தனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, அவ்வரங்குகளில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, உள்ளூர் எழுத்தாளர்களுக்கான புத்தக அரங்கு ஒதுக்கப்பட்டு, புத்தகங்கள் கண்காட்சி படுத்தப்பட்டு வருகிறது.
பத்தாவது நாளாக நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து பல்வேறு பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியினை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். மேலும், இந்த புத்தகத் திருவிழாவைக் கண்டு களிக்க விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், பிற மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர்.
ஒவ்வொரு தினமும் எழுத்தாளர்கள் மற்றும் சான்றோர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் மூலம் கலை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவு நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியின் பொழுது போக்கிற்காக பல்வேறு அம்சங்களை, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
இதில், திங்கட்கிழமை திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்சி ஊடகவியல் துறை சார்பில் நடத்தப்பட்ட காந்தாரா நடனத்தைப் பார்வையாளர்கள் அனைவரும் கண்டு களித்தனர். இந்த நடத்தை முன்னிட்டு நேற்று புத்தகத் திருவிழாவில், அளவிற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. காந்தாரா நடனத்தைக் கண்ட அனைவரும் மாணவர்களை வெகுவாக பாராட்டினர். மேலும், புத்தகத் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், காந்தாரா நடன நிகழ்ச்சி இன்றியமையாத ஒன்றாய் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
பத்து நாட்கள் விழுப்புரம் நகரமே திருவிழா கண்டது போல் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவானது, நாளையுடன்(ஏப்.5) நிறைவு பெற இருப்பதினால் நாளைய தினம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், நிறைவு நாள் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், நாளைய தினம், பொதுமக்கள் நிறைவு நாளில் அதிகமாக வருவார்கள் என்பதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அதிநவீன வசதியுடன் கூடிய உதகை அரசு மருத்துவமனை திறப்பு எப்போது? - அமைச்சர் மா.சு. கூறிய தகவல்!