விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார்.
2006-2011ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் அமைந்துள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.கெளதமசிகாமணி மற்றும் ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் உட்பட 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 2012ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட எட்டு நபர்களில் ஒருவரான லோகநாதன் இறந்து விட்டார்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 பேர் சேர்க்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின், கடந்த செப்.7ஆம் தேதி 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் அரசுத்தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியமளித்துள்ளனர். இரண்டு பேர் மட்டும் தங்கள் சாட்சியத்தை பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி முன்னாள் அரசு வழக்கறிஞர் சீனிவாசன் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அரசுத்தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியமளித்து வருகின்றனர். அரசு அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராக அலுவலர்கள் எப்படி சாட்சியமளிக்க முடியும். நேர்மையான முறையில் சாட்சியமளிக்க முடியாது.
எனவே, நீதிமன்றம் இதை கருத்தில்கொண்டு முறையாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், அரசுத்தரப்புக்கு உதவியாக விசாரணை நடத்த எங்களுக்கும் அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (செப்.12) விழுப்புரம் முதன்மை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை குற்றவியல் நீதிபதி ஆர்.பூர்ணிமா விசாரித்தார். அமைச்சர் பொன்முடி தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்குப்பதிவு செய்யப்படும் போது அமைச்சர் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இல்லாத நிலையில் முறையாக விசாரணை நடைபெற்று, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உண்மை நிலவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன என வழக்கறிஞர் தெரிவித்தார்.
எதிர்மனுதாரரான அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் செப்.25ஆம் தேதி முன்னாள் அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் டி.குகேஷ் சந்திப்பு!