விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில், வளவனூர் இளங்காட்டினைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கேஷியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 25) முன்தினம் காலை வழக்கமாக பணிக்கு வந்த முகேஷ், திடீரென உடல் நிலை சரியில்லை என்று கூறி உள்ளார். இதனையடுத்து வங்கி அருகே உள்ள விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அரசு மருத்துவமனைக்குச் சென்ற முகேஷ், அதன் பின் வங்கிக்குத் திரும்பி வரவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள், முகேஷுக்கு பல முறை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர் அழைப்பை எடுக்காத நிலையில், சில மணி நேரத்திற்குப் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் பிரியதர்ஷினி, தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை செய்து அவரைத் தேடி வந்தனர்.
இதனிடையே, முகேஷ் வங்கி பணத்துடன் கடத்தப்பட்டதாக ஆடியோ தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து முகேஷை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும், அவரது செல்போன் எண் இணைப்பை வைத்து அவர் எங்கிருக்கிறார் என தனிப்படை காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 26) நள்ளிரவு விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ஒரு பெட்டியுடன் நின்றிருந்த முகேஷை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து முகேஷிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை கடன் வாங்கி முகேஷ் விளையாடி உள்ளார்.
இந்த விளையாட்டினால் பணத்தை இழந்த முகேஷ், கடன் கொடுத்த கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால், வங்கிப் பணத்தை கையாடல் செய்து கடனை அடைக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக வங்கியில் இருந்து உடல் நிலை சரியில்லை என வெளியே செல்லும்போது, வங்கியில் இருந்த 43 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை முகேஷ் எடுத்துச் சென்றுள்ளார்.
அது மட்டுமல்லாமல், வங்கி வாடிக்கையாளர்களின் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் அவர் கையாடல் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், வங்கியில் இருந்து எடுத்துச் சென்ற 43.89 லட்சம் ரூபாயில் 3 ஆயிரம் ரூபாயை செலவு செய்து விட்டதாகவும்; முகேஷ் காவல் துறையினரின் விசாரணையில் கூறி உள்ளார். தொடர்ந்து, அவர் வேறு ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி.. கொலை செய்து ஏரியில் வீசிய கொடூர காதலன்.. காஞ்சி பகீர் சம்பவம்!