கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச் சாவடிகளில், பணி நீக்கம் செய்யப்பட்ட 56 ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சர் வி.கே.சிங்கிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் ஆகியோர் தனித்தனியே கோரிக்கை மனு அளித்தனர்.
இம்மனுவை பெற்ற கொண்ட மத்திய அமைச்சர் இது தொடர்பாக உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
"தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலையின் ஆணையத்தால், 27 திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் அவுட்சோர்சிங் முறையில் சுங்கச்சாவடிகளில் துணை ஒப்பந்தம் செய்துள்ளன.
இத்தகைய சுங்கச்சாவடிகளில் 10 முதல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்த தொழிலாளர்கள், புதிதாக சுங்கச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தானியங்கி கட்டண வசூல் தொழில்நுட்ப வருகையின் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சட்டவிரோதமாக 56 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் உதவி தொழிலாளர் ஆணையரின் உத்தரவிலும் மற்றும் RDO , திருக்கோவிலூர் Dt 20.10.2022 க்கு முன்பு நடந்த சமாதானக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தத்தில், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்ற உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டினை மீறும் விதமாக அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும், அரசியல் குழப்பமும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, மத்திய அமைச்சர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் வகையில்
அவர்களை மீண்டும் அதே பணியில் அமர்த்தி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெங்களூருவில் இஸ்லாமியர் அல்லாதோருக்கான "மசூதி சுற்றுப்பயணம்"