தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் தனி இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இவர்கள் சென்னைக்கு கொண்டுச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.