எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. எஸ்.ஆர்.எம்.யு சங்க செயல் தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சங்க தலைவர் ராஜா ஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய பாஜக அரசு சார்பில் ரயில்வே துறை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சில ரயில்களை தனியாருக்கு அளிப்பது என்றும், அந்த ரயில் கட்டணங்களை தனியாரே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலானது லாபத்தில் இயங்கும் ரயில்வே துறையை தனியாருக்கு ஏலம் விடும் முடிவாகும். தனியாரிடம் அளிக்கப்படும் ரயில்களில் ரயில்வே தொழிலாளர்கள் பணியில் இருக்க மாட்டார்கள். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும். மத்திய அரசின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஊழியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்" என்றார்.