திருவண்ணாமலை அடுத்துள்ள வேங்கிகால் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் (55). இவர் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி சென்னையிலிருந்து தனது மனைவி சத்யபாமா மற்றும் மகள் ரமாதேவி ஆகியோருடன் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் அடுத்த கொணக்கம்பட்டு என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, சத்யபாமா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் காவல்துறை குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு திண்டிவனம் - செஞ்சி சாலையில் கத்தியைக் காட்டி மிரட்டி அடையாளம் தெரியாத நபர்கள், பொதுமக்களிடம் வழிப்பறி செய்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் சின்னகாப்பான் குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவராமன், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா ஏ. கூடலூரைச் சேர்ந்த ஆனந்த ஜோதி என்பதும் தெரியவந்தது . மேலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 121 சவரன் தங்க நகைகள், இரண்டு செல்ஃபோன், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதையும் படிங்க: தொடர் வங்கி விடுமுறை எதிரொலி - நைசாக புகுந்த கொள்ளையர்கள்!