விழுப்புரம்: மரக்காணம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் ஒரு சிலர் புதுச்சேரியிலிருந்து சட்டவிரோதமாக மதுபானங்களைக் கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதும் அதனை போலீசார் பறிமுதல் செய்வதும் அவ்வப்போது நிகழ்வது வழக்கம். மரக்காணம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அமரன்(25). மரக்காணம் கடற்கரையை ஒட்டியுள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அவர் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை எக்கியார் குப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் வாங்கி குடித்துள்ளனர். இதில், சங்கர் (55), தரணிவேல் (50),மண்ணாங்கட்டி (47), மற்றொரு மண்ணாங்கட்டி (55), சந்திரன்(65 ), சுரேஷ் (65 ) உள்ளிட்ட 16 பேர் தங்களது வீட்டிற்குச் சென்றவுடன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சங்கர்(55), சுரேஷ்(65) மற்றும் தரணிவேல்(50) ஆகிய மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பின்னர் இருவர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.