விழுப்புரம்: விழுப்புரம் வளவனூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கடன் தொல்லையால் மூன்று குழந்தைகளை கொலை செய்து விட்டு பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடியாட்களை வைத்து கடன் கொடுத்த நிறுவனம் விடுத்த மிரட்டலால்தான் அக்குடும்பம் தற்கொலை செய்துகொண்டதாகவும், மிரட்டல் விடுத்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், "கடன் கொடுத்தவர்கள் விடுத்த மிரட்டலால் விழுப்புரம் மாவட்டம் வளவனூரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மோகனும், அவரது மனைவியும் தங்களது மூன்று குழந்தைகளை கொலை செய்து விட்டு தாங்களும் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது.
கரோனா காலத்தில் கடன் நிறுவனங்கள் அடியாட்களை வைத்து மிரட்டியதால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொடுமைக்கு காரணமான நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது அஞ்சலியையும், அவர்களை இழந்துவாடும் உறவினர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும், அந்தக் கடனை சட்டவிரோதமான முறையில் அடியாட்களை வைத்து மிரட்டி வசூல் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட தமிழ்நாடு அதிக வட்டிவசூல் தடைச் சட்டத்தை தமிழ்நாடெங்கும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி வீழ்ச்சி - ரவிக்குமார் எம்பி குற்றச்சாட்டு