விழுப்புரத்தில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் குமார், செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் அம்பிகாபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 'உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இளநிலை உதவியாளர் தேர்வை காலதாமதமின்றி உடனடியாக நடத்திட வேண்டும். தேர்வை வெளிப்படையாக ஊழலின்றி நடத்தி, விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
உயர் நீதிமன்றம் பொதுப்பணியிட மாறுதலுக்கு விதித்த தடை ஆணையை ரத்து செய்துள்ளதால் உடனடியாக பொதுப் பணியிட மாறுதல் அறிவிப்பை வெளியிட வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விலயுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.