உலக தமிழர்களின் உன்னத பண்டிகையாம் 'பொங்கல் திருநாள்' ஆண்டுதோறும் தை மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே நம் நினைவுக்குவருவது செங்கரும்புதான். இந்தக் கரும்புகள் தற்போது விழுப்புரம் மாவட்டம் பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன.
செங்கரும்பு சாகுபடி குறித்து பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மதியழகன் கூறும்போது:
கடந்த ஆண்டு வைகாசி மாதம் செங்கரும்பு பயிர் செய்தோம். கடந்த முறை 20 கரும்புகள் உள்ள கட்டுகள் ரூபாய் 320-க்கு விற்பனை செய்தோம். அந்த நம்பிக்கையில் தற்போது மீண்டும் பயிர்செய்துள்ளோம்.
கரும்பு பயிர் செய்தால் அரசும் ஆலை நிர்வாகமும் விவசாயிகளுக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. எனவேதான் மாற்றுப்பயிராக இந்தாண்டு செங்கரும்பு பயிர்செய்துள்ளோம். தற்போது இதற்கும் அதே நிலைதான் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு வெளி மாவட்டங்களிலிருந்து செங்கரும்புகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சொந்த மாவட்டத்திலுள்ள எங்கள் கரும்புகளை விலைக்கு வாங்க இதுவரை யாரும் வரவில்லை. இது குறித்து, கூட்டுறவு அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தச் செங்கரும்பு சாகுபடியில் நாங்கள் அதிகளவில் பணம் செலவுசெய்துள்ளோம். எங்களைப்போல் இந்தப் பகுதியில் ஏராளமான விவசாயிகள் இதே நிலையில் உள்ளனர். அரசு எங்களது கரும்புகளைக் கொள்முதல் செய்துகொள்ளும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.
எங்களின் இந்த நிலையை அறிந்துகொண்ட வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு கரும்புகளைக் கேட்கின்றனர். கடந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக அரசு சார்பில் எங்களிடம் 20 கரும்புகள் உள்ள கட்டுகள் ரூ.320-க்கு கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், இந்தமுறை அதே கரும்பை வியாபாரிகள் ரூ.220-க்கு கேட்கின்றனர்.
எனவே பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் இவ்வேளையில் அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு எங்கள் மாவட்டத்தில் விளைந்துள்ள கரும்புகளை உரிய விலைக்கு கொள்முதல்செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகைக்கு தித்திக்கும் கரும்பை நமக்கு சாகுபடி செய்துதரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கசப்பாகவே இருப்பது வேதனையின் உச்சம்.
இதையும் படிங்க: 'கரும்பு வாங்க யாரும் வரவில்லை' - வேதனையில் விவசாயிகள்