விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து, மயிலம் மூன்று முனை சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயி ஒருவர் முதலமைச்சரானது எடப்பாடி பழனிசாமி மட்டுமே. மீண்டும் அவரை முதல்வராக்க வேண்டும். கடந்த ஐந்து வருடமாக திமுகவை சேர்ந்த மாசிலாமணி தொகுதிக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை, தொகுதி பக்கம் கூட வந்ததில்லை.
அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தைக் கூட மாசிலாமணி நிறைவேற்றவில்லை. அவருக்கு வாக்களிப்பதற்கு மக்களிடம் ஒரு காரணமும் இல்லை. திமுக முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி. மக்கள் அனைவரையும் முன்னேற்றவே நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம்.
திமுக என்பது ஒரு கம்பெனி. ஒரே ஒரு குடும்பம் நல்ல இருப்பதற்காகவா அண்ணா கட்சி தொடங்கினார்?. திமுக தலைமையிலும் ஒரே குடும்பத்தின் ஆதிக்கம் மட்டுமே. விழுப்புரத்தில் பொன்முடி குடும்பத்தினரும் இவ்வாறே செயல்படுகின்றனர். முதலமைச்சராக என்ன தகுதி உள்ளது ஸ்டாலினிடம்? ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே தகுதி அவர் கலைஞரின் மகன் என்பது மட்டுமே. ஸ்டாலினுக்கும், விவசாயத்துக்கும் சம்பந்தம் உள்ளதா? வெறும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வேலையைத்தான் ஸ்டாலின் செய்து வருகிறார்.
பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு இரு காரணங்கள்தான். ஒன்று முதல்வர் வேட்பாளர் ஒரு விவசாயி, மற்றொன்று சமூக நீதி. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு நிறைவேறியதற்கு, முழுக்க முழுக்க காரணம் சட்டத்துறை அமைச்சர் சண்முகம்தான். திமுகவிற்கு பெண்களை மதிக்க தெரியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. முதல்வரின் தாயார் குறித்து கொச்சையாக பேசிய ஸ்பெக்ட்ரம் ராசாவை, அக்கட்சியின் தலைவர் கண்டித்தாரா? நடிகை குறித்து தவறாக பேசியதற்காக ராதா ரவி மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழ்நாட்டு பெண்கள் இனிமேல் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.
சட்டப்பேரவையில் சட்டையை கிழித்து பனியன் விளம்பரம் செய்தவர் ஸ்டாலின். ஸ்டாலின் நம்பும் ஒரே ஆள் ஐபெக் மட்டுமே. ஸ்டாலின் வாராரு, அல்வாதரப் போறாரு. திமுக சார்பில் வெற்றி பெற்ற 38 பேரும் இதுவரை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் எனக் கூறியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், அவ்வாறு செய்ய நாங்கள் விடமாட்டோம். ஸ்டாலினுக்கு திராணி இருந்தால் அரசியலில் என்னுடன் மோதிப்பார்க்கட்டும்’ என்றார்.
இதையும் படிங்க: 'இந்த பூச்சாண்டி செயல்களுக்கு திமுக அஞ்சாது' - ரைடு குறித்து துரைமுருகன்