விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் செஞ்சி மஸ்தான். தமிழ்நாடு அமைச்சரவையில் இவர் பொறுப்பேற்றதில் இருந்தே அடிக்கடி பல்வேறு குற்றச்சாட்டுகளிலும் சிக்கி வருகிறார். முக்கியமாக மரக்காணம் விஷச்சாராய இறப்பு விவகாரம், வக்பு வாரிய சொத்துக்களை அபகரித்தது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக உலா வருகின்றன.
குறிப்பாக, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே பொறுப்புகளை வழங்கி வருவதாகவும் இவர் மீது தொடர் குற்றச்சாட்டுகளை திமுக மூத்த உறுப்பினர்கள் கூறீ வருகின்றனர். பிரபல சாராய வியாபாரியான மரூர் ராஜாவுடன் அமைச்சர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியது.
இதனை அதிமுகவினர் மேடைதோறும் முழங்கி வந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், மேடைதோறும் அமைச்சர் மஸ்தான் குறித்தும், விஷச்சாராயம் விற்பவருடன் தொடர்பில் இருப்பதாகவும் பேசும் அளவிற்கு அமைந்தது. இதனிடையே, கடந்த மாதம் நடைபெற்ற திண்டிவனம் நகராட்சி கூட்டத்தின்போது, நிர்வாக செயல்பாடுகளில் அதிருப்தி இருப்பதாக கூறி 13 திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதோடு, அமைச்சர் மஸ்தான் பற்றி திமுக தலைமை மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினிடம், 13 கவுன்சிலர்களும் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்திருந்தனர். இதன் தொர்ச்சியாக கடந்த 31ஆம் தேதி நடைபெற்ற திண்டிவனம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 7-வது வார்டு திமுக கவுன்சிலர் புனிதா வாயில் கருப்பு துணியை கட்டியபடி வந்து பேரதிர்ச்சி கொடுத்தார்.
மேலும், நகர்மன்ற கூட்டத்தில் பேசிய திமுக அதிருப்தி கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்றும் இதனால் பொதுமக்கள் மத்தியில் தங்களுக்கு அவமானமாக உள்ளதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஸ்டாலின் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நகர்மன்றம் செயல்படுவதாகக் கூறி, தங்களுடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொடுக்கப்போவதாக தெரிவித்தனர்.
13 கவுன்சிலர்கள் கையொப்பமிட்ட ராஜினாமா கடிதத்தை சபையில் உயர்த்திக் காட்டி வெளிநடப்பு செய்தனர். நகராட்சி வார்டுகளுக்கான அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பாக வேண்டுகோள் விடுத்தால், அமைச்சரின் மருமகன் ரிஸ்வானைக் கேளுங்கள் என்று கூறுவதாகவும், அவரின் தலையீடு திண்டிவனம் நகராட்சியில் அதிகமாக உள்ளதாகவும், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் செயல்பாட்டில் அமைச்சரின் மருமகன் ஏன் தலையிடுகிறார் என்ற வினாவுடன் வெளிநடப்பு செய்ததாகவும் திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, செஞ்சி பேரூராட்சியில் செஞ்சி மஸ்தான் தனது மகன் மொக்தியார் அலி மஸ்தானை போட்டியிடச் செய்து வெற்றி பெற்ற வைத்ததாகவும், அவரின் முயற்சியினாலே அவருடைய மகன் செஞ்சி பேரூராட்சி தலைவராகினார் என குற்றம்சாட்டப்பது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் மொக்தியார் அலி மஸ்தானே இருந்து வருகிறார். இது மட்டுமல்லாது அமைச்சர் செஞ்சி மஸ்தானின் உதவியாளராக செயல்பட்டு வரும் அவருடைய மருமகன் ரிஸ்வான், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினரே கட்சின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருவதால், திமுகவில் அடிப்படை மற்றும் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த கட்சித் தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளதாக தெரிகிறது. வாரிசு அரசியல் செய்யும் திமுக என்று எதிர்கட்சியினர் மேடைதோறும் விமர்சித்து வரும் நிலையில், அதனை அமைச்சர் மஸ்தானி குடும்பம் நிரூபித்து வருவதாகவும் பேசப்படுகிறது.
கடந்த சில நாள்களாக அமைச்சர் மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டு அந்த இடத்தில் நாசர் பணியமர்த்தப்படுவார் என்கிற ஓர் விவாதம் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டு அமைச்சர்கள் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில், அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் மற்றும் மரக்காணம் விஷச் சாராய மரணம், பள்ளி மாணவர்கள் கஞ்சா மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகுவது, செம்மண் குவாரி வழக்கு என தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் தலைப்புச் செய்திகளில் முதன்மையாக இடம் பெற்று வரும் நிலையில் திமுக தலைமை இந்த விவகாரத்தில் விரைவில் முடிவெடுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Seeman vs Vijayalakshmi: கைது செய்யப்படுகிறாரா சீமான்? 5 தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்ததாக தகவல்!