நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதனிடையே விழுப்புரம் மாவட்ட காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவருடன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடன் சென்றார்.
தொடர்ந்து நடைபெற்ற காவலர்களின் அணிவகுப்பு மரியாதையும் ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். விழாவில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 52 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்களை ஆட்சியர் அண்ணாதுரை வழங்கினார்.
பின்னர் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊர்க் காவல் படையினர், போக்குவரத்து காப்பாளர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பையும் ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் 482 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதேபோன்று சமீபத்தில் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட அம்மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு, பள்ளி மாணவ , மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து 61 பயனாளிகளுக்கு 46 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.