விழுப்புரத்தை அடுத்த பாணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (34). விவசாயக் கூலித்தொழிலாளரான இவர், சிறு வயதிலிருந்தே நடிகர் ரஜினிகாந்த் மீது அதீத ஆர்வம் கொண்ட ரசிகராய் இருந்துள்ளார். அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை என்று நேற்று முன்நாள் ரஜினிகாந்த் அறிவித்ததை அடுத்து, ராஜ்குமார் கடும் மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜ்குமார் நேற்று மாலை தனது முகநூல் பக்கத்தில், ’ரஜினிதான் என் வாழ்க்கை.. இதுவே எனது கடைசி பதிவு’ என்று பதிவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி புலம்பியுள்ளார். பின்னர் இரவு தூங்கச்சென்ற அவர் காலை படுக்கையிலேயே உயிரற்று கிடந்ததை பார்த்து அவரது மனைவி அலறித் துடித்துள்ளார். ஆனால், ராஜ்குமார் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கே தெரியவில்லை.
இதையடுத்து இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த ராஜ்குமாரின் உடலை மீட்ட காவல்துறையினர், கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவிலேயே ராஜ்குமாரின் இறப்பு இயற்கை மரணமா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரிய வரும்.
இதையும் படிங்க: கமல் குறித்து பேசி அவரை வளர்த்து விட விரும்பவில்லை - கடம்பூர் ராஜு