விழுப்புரம்: ஆலங்குப்பம் ஏரிக்கு வாய்க்கால் மூலம் மழைநீரில் ரசாயன கழிவு கலந்திருப்பதால் வட்டாட்சியர், வட்டார அலுவலர் ஆகியோர் ஏரி நீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆலங்குப்பம் ஏரியிலிருந்து கலிங்கல் மூலம் முன்னூர் கிராம ஏரியில் கலந்து தற்பொழுது ஏரியின் நீரானது முழுவதுமாக ரசாயனம் கலந்து காணப்படுகிறது. இதனால் ஏரி முழுவதும் அதிக அளவில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு ஏரிகள் மூலம்தான் சுற்றியுள்ள ஏழு கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் 3,500 ஏக்கர் விவசாய நிலங்களில் தற்போது நீர்ப்பாசனம் கேள்விக்குறியாக உள்ளது. அப்பகுதியில் உள்ள குடிநீர் முழுவதும் துர்நாற்றம் வீச ஆரம்பித்து உள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கிராம ஏரிகளில் இருக்கக்கூடிய மீன்கள் ஒவ்வொன்றாகச் செத்து மிதக்கத் தொடங்கியுள்ளன. மேலும் ஏரி நீரில் கலந்துள்ள ரசாயனத்தால் உடல் மீது நீர் பட்டால் சரும பிரச்சினைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வட்டாட்சியர், வட்டார அலுவலர் ஆகியோர் ஏரிநீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் சாலை விபத்து: 4 பேர் உயிரிழப்பு!