தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரையில் இதுவரையில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன், நாம் தமிழர் வேட்பாளர் பிரகலதா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ராஜா மற்றும் அரசன் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. அதன்படி சமீபத்தில் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கலியமூர்த்தி (53) இன்று பிற்பகலலில் தனது வேட்புமனுவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்பிரமணியனிடம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வரும் கலியமூர்த்தி மூன்று முறை தமிழக சட்டப்பேரவை (2006, 2011, 2016) தேர்தலிலும், 2 முறை மக்களவைத் (2009, 2014) தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.