விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர் கோயில் பூசாரியாக வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி வசந்தா (50). இன்று (ஜூன் 23) மதியம் வசந்தா செண்டூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஆட்டோவில் வந்த ஒரு பெண் உள்பட மூன்று பேர் தங்களை வியாபாரிகள் எனக்கூறி வசந்தாவிடமிருந்த ஐந்து ஆடுகளை ரூ.24 ஆயிரத்திற்கு விலை பேசினர். பின் வசந்தாவிடம் அவர்கள் 24 ஆயிரத்தை இரண்டாயிரம் ரூபாய் தாள்களாகக் கொடுத்துள்ளனர். இதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய வசந்தா தனது பிள்ளைகளிடம் கொடுத்துள்ளார்.
அப்போது வசந்த கொண்டுவந்த ரூபாய் தாள்கள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எனத் தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த வசந்தா இது தொடர்பாக மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் கள்ள நோட்டு கொடுத்து ஆட்டை வாங்கிச் சென்ற மூன்று பேரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: உசிலம்பட்டியில் கள்ளநோட்டுகளுடன் திரிந்த மாணவர்கள் கைது