விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக தொண்டர்கள் கருத்துக்கேட்பு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “அதிமுகவின் அடிப்படை தொண்டர்கள் நினைப்பதை கருத்துக்கேட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. தற்பொழுது அடிப்படை தொண்டர்களின் கருத்துகள் வெளிவருவதில்லை. அடிப்படை அண்ணா திமுக உறுப்பினர்களின் கருத்துகளைக்கேட்ட பின் தான் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதைத்தான் அப்பொழுது எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் கடைப்பிடித்தனர்.
ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஓபிஎஸ் ஈபிஎஸ்சை வீழ்த்தினாரா அல்லது ஈபிஎஸ் ஓபிஎஸ்ஸை வீழ்த்தினாரா என்கின்ற அளவில்தான் அண்ணா திமுகவின் யுத்தம் திசை மாறி சென்று கொண்டுள்ளது. அரசியல் கட்சியின் நோக்கம் ஆளுகின்ற கட்சியாக அந்த கட்சி உருவெடுக்க வேண்டும். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக அண்ணா திமுகவின் தலைமைப்பதவிக்காக இவர்களுக்குள் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து அண்ணா திமுக பலவீனம் அடைகின்ற வகையில் தொடர்ந்து இவர்களின் செயல்பாடு உள்ளது.
மற்ற கட்சிகளுக்கு இது பலத்தை ஏற்படுத்தும் முக்கியமாக திமுக வலுப்பெறும். தொண்டர்கள் மூலம் ஒற்றைத் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான்கு, ஐந்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இதனைத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை திணிக்கப்படுகிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றாக இணைந்து தங்களுக்கான தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் தலைமை தான் வலிமையான தலைமையாக இருக்கும். நீதிமன்றங்களை ஈபிஎஸ், ஓபிஎஸ் தவறாக வழி நடத்துகிறார்கள்.
தேர்தல் வெற்றியை பொதுக்குழு நபர்கள் பெற்றுத் தர முடியாது. அடிப்படை தொண்டர்கள் தான் தேர்தல் வெற்றியை பெற்றுத் தர முடியும். ஒன்றுபட்ட அண்ணா திமுகவிற்குத்தேவை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
தலைமைதான். சாதி வாரியாக, மண்டல வாரியாக அண்ணா திமுக தற்பொழுது பிளவை சந்தித்து வருகிறது. இந்த கட்சியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ற ஒரு கட்டமைப்பை அமைப்பதே தவறு.
எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பி தான் அதிமுக தொண்டர்கள் வந்தார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரண்டு நபர்கள் செல்வாக்கு பெற்றவர்கள் இல்லை. இவர்களுக்காக கட்சியில் சேர்ந்தவர்கள் இல்லை. எடப்பாடி பழனிசாமி, அண்ணா திமுக வளர்ச்சிக்காக போராடவில்லை. தன்னுடைய வளர்ச்சிக்காக மட்டுமே போராடி வருகிறார்.
இதேபோன்று ஓபிஎஸ் துணை முதலமைச்சராக வேண்டும். தனது மகனுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டு வருகிறார். எங்களது போராட்டம் அடிப்படை தொண்டர்களின் முடிவுபடி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயல்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்"