தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த விக்கிரவாண்டி தாலுகா குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.16 லட்சம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைபற்றப்பட்ட பணம் பின்னர் விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.