விழுப்புரம் அருகேயுள்ள பானாம்பட்டு கிராமத்தில் 263 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பாதாள சாக்கடை திட்டத்துக்கு இன்று (நவ.11) சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டினார். அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் "ஜெயலலிதா மரணம் குறித்து ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தாமதமாகிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்துப் பேச திமுகவுக்கு தகுதி இல்லை. பேரறிவாளனுக்காக ஸ்டாலின் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியவர்கள் திமுகவினர்.
ஆனால் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. நீட் தேர்வு குறித்துப் பேச திமுகவுக்கு அருகதை இல்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகதான்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசாணை வெளியிட்ட ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்.
ஆளுநரின் மிரட்டலுக்கு பயந்து திமுகவினர் அவர்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மரணத்தில் அரசியல் செய்பவர்கள் திமுகவினர். முரசொலி மாறன் மரணத்தை வைத்து ஆதாயம் தேடியவர்கள் திமுகவினர்" என்றார்.
இதையும் படிங்க: விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தியவர் ஜெயலலிதா' - அமைச்சர் பெஞ்சமின்