கரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் நாடு முழுவதும் இன்று (மே 17) வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துவிதமான போக்குவரத்து சேவைளும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தங்கி பாய், கம்பளம் உள்ளிட்டவைகளை கடந்த ஆறு மாதங்களாக விற்பனை செய்துவந்த 1000க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதி கேட்டு, இணையம் மூலமாகவும், மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரிலும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து அரசு சார்பில் இவர்கள் சொந்த ஊர் திரும்ப நேற்று இரவு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 247 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து 197 பேர், கடலூர் மாவட்டத்தில் இருந்து 600 பேர், அரியலூர் மாவட்டத்தில் இருந்து 330 பேர் என மொத்தம் 1,324 பேர் நேற்றிரவு விழுப்புரத்தில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயணச் சீட்டு, உணவு, நோய் எதிர்ப்பு மாத்திரைகள், முகக்கவசங்கள், சானிட்டைசர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இரவு எட்டு மணிக்கு புறப்பட்ட ரயிலை, மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா. பி. சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் வழியனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : தொழிலாளர் பாதுகாப்பு முக்கியம் - மாயாவதி அறிவுறுத்தல்