விழுப்புரம்: தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பலரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டை உலுக்கிய இந்தச் சம்பவத்தில், விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் வியாபாரியான அமரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அமரனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கள்ளச்சாராய வியாபாரி முத்துவை போலீசார் தேடி வந்தனர். இதற்காக சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் முத்துவைத் தேடி வந்த நிலையில், டி.எஸ்.பி சுனில் தலைமையிலான தனிப்படை போலீசார் முத்துவை நேற்று காலை 10 மணி அளவில் திண்டிவனம் மேம்பாலம் அருகே வைத்து கைது செய்தனர்.
பிறகு முத்துவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திண்டிவனம் 20-ஆவது வார்டு திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ரம்யாவின் கணவர் மருவூர் ராஜா என்பவரிடமிருந்து சாராயம் வாங்கியதை வாக்குமூலமாக அளித்து உள்ளார். மருவூர் ராஜா என்பவர் திமுக அமைச்சர் மஸ்தான் உடன் நெருக்கமாக இருப்பதால் காவல்துறையினர், இதற்கு முன்பு பலமுறை அவரைக் கைது செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திண்டிவனத்தில் மருதூர் ராஜா பயணம் செய்த காரை, சோதனை செய்ததில் மூன்று கேன்களில் இருந்த கள்ளச் சாராயம் பிடிபட்டது. மேலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பாக்கெட் செய்யத் தேவையான உபகரணங்களை போலீசார் கைப்பற்றியதோடு, மருவூர் ராஜாவை கைது செய்து திண்டிவனம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “விழுப்புரம் மாவட்டத்திற்கு முழுவதும் திமுக கவுன்சிலரின் கணவர் மருவூர் ராஜா கள்ளச் சாராயத்தை விநியோகம் செய்கிறார். அவருக்குத் துணையாக திமுகவைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் இருக்கின்றனர். காவல் துறையினருக்கு தெரிந்தே மருவூர் ராஜா கள்ளச்சாராயத்தை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்கிறார்” எனப் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்த நிலையில் தற்பொழுது சிறையில் இருக்கும் மருவூர் ராஜா மீது குண்டர் சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வழங்கியுள்ளார். விழுப்புரத்தையே கலக்கிய பிரபல சாராய வியாபாரியும், திமுக கவுன்சிலரின் கணவருமான மருவூர் ராஜா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: "கள்ளச்சாராயம் குடித்தால் 10 லட்சமாம்.. சீமான் கேள்வி..?