திருவண்ணாமலை மாவட்டம், எரும்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (26). இவர், பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுப்பது போன்று நடித்துவந்துள்ளார். அப்போது, ஏடிஎம் மையத்திற்கு வரும் வயதானவர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து அவர்களின் ஏடிஎம் கார்டை வாங்கி ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு பணத்தைத் திருடிவிட்டுத் தலைமறைவாகிவிடுவார்.
இதுதொடர்பாக நவீன்குமார் மீது அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் நான்கு வழக்குகளும், செஞ்சி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திண்டிவனம் காவல் நிலையத்தில் ஆறு வழக்குகளும் என மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்நிலையில், நவீன்குமார் குறித்து அவலூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம் காவல் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதன்படி, அவலூர்பேட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்மில் நவீன்குமார் நீலநிற தொப்பி, கைலியுடன் முதியவர் ஒருவரை ஏமாறி ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தைத் திருடுவது போல சிசிடிவி கேமரா காட்சி பதிவானது.
இதையடுத்து, அவலூர்பேட்டை உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் சாதாரண (மஃப்டி) உடையில் காவல் துறையினர் ஏடிஎம்மை நோட்டமிட்டனர்.
இதேபோன்று சுமார் இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஏடிஎம்மில் நோட்டிமிட்டுவந்த காவல் துறையினர், நீலநிற தொப்பி, கைலியுடன் ஏடிஎம் மையத்தில் நின்றுகொண்டிருந்து நபரைச் சந்தேகத்தின் அடிப்படையில் பார்த்தபோது அந்த நபர் திடீரெ ஓட ஆரம்பித்தார்.
அவரை துரத்திச் சென்று பிடித்து விசாரித்ததில் அவர் நவீன்குமார் என தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.2.77 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்யப்பட்டது.