விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசித்துவந்த அருண் (33) என்பவருக்கு சிவகாமி (27) என்ற மனைவியும் பிரியதர்ஷினி (4), பாரதி (3), சிவஸ்ரீ (1) ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர்.
நகைக்கடையில் பொற்கொல்லர் வேலை செய்துவந்த இவருக்குப் பணத்தின் மீது ஏற்பட்ட அதீத ஆசையால் லாட்டரிச் சீட்டில் அதிகளவு பணத்தை முதலீடு செய்துள்ளார். லாட்டரி ஒரு சூதாட்டம் என்பதை உணராமல், எப்படியேனும் குறுக்குவழியில் பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சம்பாத்தியம் மொத்தத்தையும் லாட்டரியில் அழித்துள்ளார்.
இதனால் தொழிலில் நஷ்டமடைந்து போதிய வருமானமின்றி வறுமைநிலைக்குத் தள்ளப்பட்ட அருண், தனது ஒரு வயது குழந்தை உள்ளிட்ட மூன்று மகள்களையும் கொலை செய்துவிட்டு தானும் தனது மனைவியும் தற்கொலை செய்துகொள்வோம் என்று முடிவெடுத்துள்ளார்.
அதனடிப்படையில், மதுவில் சயனைடு கலந்து அதனை தான் பெற்ற குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, அவர்கள் துடிதுடித்து இறப்பதை வீடியோவாகப் பதிவு செய்துவிட்டு தனது மனைவியுடன் தானும் சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டார். உச்சபட்சமாக இது அத்தனையையும் காணொலியாகவும் பதிவு செய்துள்ளார் அருண்.
தனது சொந்த விருப்பத்தின்பேரில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, அதில் நஷ்டமடைந்தால் அதனை எதிர்கொள்வதைவிட்டுவிட்டு, ஒரு குடும்பத்தையே அழித்துள்ளார் இந்தத் தகப்பன். அப்பா கொடுக்கிறார் என்று வாங்கிக் குடித்த அந்தக் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அது விஷமென்று. இதற்கு தாயும் உடந்தையாக இருந்தது வேதனையின் உச்சம்.
எந்த ஒரு துயரத்திற்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது. இதனை தன் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டிய தகப்பனாக இருந்துகொண்டு தனது தனிப்பட்ட தோல்வியால் குழந்தைகளின் வாழ்க்கையையே அழித்துள்ள அருணின் முடிவு, பேராசைக்காரர்களுக்கு பெரும் பாடம்.