விழுப்புரம்: கோலியனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர், நடராஜன். இவருக்கும் இவருடைய மூத்த சகோதரரான ஸ்டாலின் என்பவருக்கும், நீண்ட காலமாக பாகப்பிரிவினை தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் நடராஜன், தனது அண்ணன் ஸ்டாலினை பிரச்னை குறித்து பேசுவதற்காக பள்ளிக்கு அருகே வருமாறு அழைத்துள்ளார்.
இதனையடுத்து பள்ளியின் அருகில் நடராஜன், ஸ்டாலின் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றவே, திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆசிரியர் நடராஜனை, ஸ்டாலின் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்த பள்ளி மாணவர்கள், சண்டையை தடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது 11ஆம் வகுப்பு பயின்று வரும் 3 மாணவர்களின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து ஸ்டாலினை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வளவனூர் காவல் துறையினர், ஸ்டாலினை கைது செய்தனர்.
மேலும் காயமடைந்த ஆசிரியர் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், காயமடைந்த மாணவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை.. நிர்பயா வழக்கை நினைவூட்டிய பீகார் சம்பவம்!