சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக இச்செயல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கி, பதிவாளரை நியமிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
பதிவாளரின் செயல் சட்டத்தை மீறியது
அதில், ”டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் கடந்த அதிமுக அரசால் ஒதுக்கப்பட்டது.
இருப்பினும் தற்போதைய அரசின் புறக்கணிப்பால், பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்திலேயே செயல்பட்டுவருகின்றது. பல்கலைக்கழகத்திற்குப் பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்லை வரம்பை மீறி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல்.
வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலகல்
பல்கலைக்கழகத்தைப் பிரித்து இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் உள்ளதால், திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பதிவாளரின் அறிவிப்புக்குத் தடைவிதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி அமர்வில் இன்று (ஜூலை 29) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கு வரும் திங்கள்கிழமை தலைமை நீதிபதி அமர்வில், விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய தடை விதிக்க கோரி வழக்கு - உயர் நீதிமன்றம் மறுப்பு