விழுப்புரம்: கடந்த 2021அம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விழுப்புரத்தில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கடந்த ஜூன் 16ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் ராஜேஷ்தாஸை குற்றவாளி என அறிவித்து, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தது.
மேலும், ராஜேஷ்தாஸுக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்.பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வது மற்றும் அவர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடங்குவதற்காகவும் கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் இன்று வாதாடுவதற்கு இறுதிக் கால அவகாசம் அளிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தரப்பு கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி பூர்ணிமா, நீதிமன்றம் என்ன விளையாட்டு மைதானமா? என சரமாரியாகக் கேள்வி எழுப்பி, இந்த வழக்கிற்கு, வரும் ஜன.6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ராஜிவ் கொலை வழக்கு: முருகன் லண்டன் செல்ல மறுப்பு தெரிவித்த மத்திய அரசு: பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்!