உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 330-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும்வகையில், இன்று ஒருநாள் (மார்ச் 22) நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமலுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க விழுப்புரம் மாவட்ட மக்கள் ஊரடங்கு அமலுக்கு முழுஅளவில் ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர். இதனால் விழுப்புரம் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
குறிப்பாக விழுப்புரம் வழியாகச் செல்லும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி நிலையில் உள்ளது. ஒருசில கனரக வாகனங்கள் மட்டுமே அந்த வழியாகச் சொல்கின்றன.
இதேபோல் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கியச் சந்திப்பாக விளங்கும் விழுப்புரம் பேருந்து நிலையம் பயணிகளோ, பேருந்துகளோ இன்றி மைதானம் போல் காட்சி அளிக்கிறது. சென்னையில் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் ரயில் நிலையமும் காலியாக உள்ளது.
முக்கிய வீதியில் உள்ள வணிக வளாகங்கள், பிரபல துணிக்கடைகள், நகைக்கடைகள், ஏடிஎம் மையங்கள் அனைத்தும் அடைத்துவைக்கப்பட்டுள்ளன. காய்கறிச் சந்தையிலும் இதே நிலை நீடிக்கிறது.
அரசு மருத்துவமனை வழக்கம்போல் செயல்படுகிறது. மேலும் நகரின் முக்கிய வீதிகளில் தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். காவல் துறையினர் அவ்வப்போது ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'வதந்தியை தடுக்க மக்கள் வீட்டிலிருந்து ஆதரவு அளிக்க வேண்டும்'