விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பரங்கனி கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட இருளர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி-தாட்சாயிணி என்பவரின் மூன்றாவது மகள் தனலஷ்மி.
இவர், அண்மையில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 354 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் நான்காம் இடம் பிடித்துள்ளார். இதையடுத்து, கணிதத்துறையில் மேல்படிப்பு படிக்க விருப்பப்பட்டு, கல்லூரியில் சேர்வதற்காக சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இது குறித்த விசாரணைக்கு வந்திருந்த அலுவலர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மாணவி தனலஷ்மியை மற்றொரு தரப்பினர் தாக்க முயற்சித்துள்ளனர்.
இது குறித்து தனலஷ்மியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த வேறொரு சமூகத்தினரான பெருமாள், துரைக்கண்ணு, ஏழுமலை, கோபால் ஆகியோர் மீது கிளியனூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி பிரிவில் வழக்கு பதிவு செய்யாமல், சி.எஸ். ஆர் மட்டும் வழங்கப்பட்டுள்ளது என பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.