விழுப்புரம்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் மற்றும் அதைத் தொடர்ந்து காணும் பொங்கல் ஆகிய தினங்களில் தமிழக கிராமங்கள் தோறும் மஞ்சுவிரட்டு, கபடி, வழுக்கு மரம் ஏறுதல், இளவட்டக் கல் தூக்குதல் மற்றும் தெரு முனை நாடகம் ஆகிய நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களான பாண்டுர், களமருதூர், காம்பட்டு, ராஜபாளையம், ஏமம், ஆதனூர், பிள்ளையார் குப்பம், பெரியசெவலை, சேந்தநாடு, குமாரமங்கலம், நெய்வானை மற்றும் பில்ராம்பட்டு ஆகிய பகுதிகளில் மஞ்சுவிரட்டு மற்றும் இளவட்டக்கல் தூக்குதல் ஆகிய போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்று நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட, இளவட்டக்கல் போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உருண்டை வடிவிலான கல்லை தன்னுடைய நெற்றிப் பொட்டு வரை தூக்கி கீழே வீச வேண்டும் இவ்வாறாக மிகவும் கனமான இளவட்டக்கல்லைப் பல இளைஞர்கள் தங்களுக்கான வீரமாக நினைத்து ஊர் பொதுமக்கள் முன்னே தூக்கி வீசி பரிசுகளை வாங்கிச் செல்வார்கள்.
இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்ள அக்காலத்தில் இளைஞர்கள் தங்களுடைய உடல் அமைப்பை முறுக்கேற்றி இதற்கான போட்டிகளில் பங்கேற்பார்கள். தற்போது இது போன்ற போட்டியில் பங்கேற்கும் பல இளைஞர்கள் வெற்றி பெற்றாலும், பல இளைஞர்கள் அதிகப்படியான பாரம் தூக்குவதால் உயிரிழப்பு மற்றும் மூச்சுப்பிடிப்பு ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தற்போது வரை சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இளவட்டக்கல் என்பது ஒரு எடை தூக்கும் விளையாட்டு. பொங்கல் மற்றும் திருவிழாக் காலங்களில் இந்தப் போட்டி நடைபெறும். குறிப்பிட்ட கல்லைத் தலைக்குமேல் தூக்கிக் காட்டும் இளைஞனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவது தமிழரின் வழக்கங்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் இவருடைய மகன் பிரபு (வயது 27) தச்சு வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (ஜன. 17) மாலை கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, இளவட்டக் கல்லைத் தூக்கிய போது கல் தவறி அவரது முகத்தாடையில் விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அதிகப்படியான பாரம் அவரின் மார்பக பகுதி மீது விழுந்ததால் அவர் மூச்சுத் திணறல் காரணமாக ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொங்கல் விழாவின் போது இளவட்டக்கல் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!