விழுப்புரம்: விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது, அத்தகைய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால், மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியபோது, 'ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாக தூத்துக்குடி பகுதியை நாசமாக்கிய வேதாந்தா நிறுவனம், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு முதலில் அதிமுக ஆட்சியிடம் அனுமதி கேட்டார்கள். பொதுமக்களுடைய கடுமையான எதிர்ப்பின் காரணமாக அப்போது அந்த அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும்: மீண்டும் அவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள். கடலிலேயே அமைப்பதற்கு அவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இப்போதுதான் விவசாயிகள் சற்று நிம்மதியாக இருக்கிறார்கள். அவர்களுடைய நிம்மதியைக் குலைக்கும் விதமாக வேதாந்தா நிறுவனம் இங்கே இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்கு எதிராக தொடர்ந்து இப்படி செயல்படுமேயானால், மக்கள் கிளர்ந்தெழுந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கா வண்ணம் அவர்களை அரணாக காத்து நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினார்.
இதையும் படிங்க: 'மின்வெட்டுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு - துரை வைகோ குற்றச்சாட்டு!'