விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை உயா்கல்வித் துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தாா். அப்போது கனிமவளத் துறையையும் அவா் கூடுதலாக கவனித்தாா். இந்தக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாகப் புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக அமைச்சா் க.பொன்முடி, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி எம்.பி. மற்றும் ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமாா், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 போ் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் தொடா்புடைய லோகநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டாா்.
இந்த வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 67 போ் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், எட்டு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு ஆதரவாக தன்னையும் இணைத்துக் கொள்ள மனு செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று ஆஜராக அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமாரை, இனி உங்கள் தரப்பு வாதங்களையும் கேட்டு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் செயல்படுவார்கள். இனி ஜெயக்குமார் நேரில் ஆஜராக தேவையில்லை, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகலாம் என்று வழக்கை நீதிபதி பூர்ணிமா ஒத்தி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கனிம வளங்களை அரசு இயந்திரம் கொண்டு சூறையாடுவதை ஒருபோதும் அதிமுக அனுமதிக்காது. பொன்முடி வழக்கில் முகாந்திரம் இருப்பதாக உயர்நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. இனி வழக்கு துரிதப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
பின்னர் விழுப்புரம் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பொன்முடி மீதான பூத்துறை செம்மண் குவாரி வழக்கில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுள்ளதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொன்முடி அவரது ஆதரவாளர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், தண்டிக்கப்பட வேண்டும் என்று செம்மண் குவாரி வழக்கில் தன்னை இணைக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு தொடர்பாக நீதிபதி உத்தரவிட்டத்தின் பேரில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினேன். அப்போது நீதிபதி இவ்வழக்கில் தன் மனுவை ஏற்றுகொள்வதாகவும், அரசு தரப்பு வாதங்கள் கேட்டு தொடர் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்ததாக கூறினார்.
அரசு தரப்பு சாட்சியங்கள் ஆளுங்கட்சியாக திமுக உள்ளதால் சரியான முறையில் விசாரணையில் பதில் அளிக்கவில்லை. இயற்கையை சுரண்டி கொள்ளையடிப்பவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க கூடாது என்பதற்காக, பொதுநலன் கருதி வழக்கில் உள்நோக்கம் இல்லாமல் தொடரப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக..! அடுத்த திட்டம் என்ன..?