விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது, பாதுகாப்புக்குச் சென்ற பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் ஆகிய இருவர் மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று (செப்.15) விசாரணைக்கு வந்தது. நீதிபதி கோபிநாத் முன்னிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி, முன்னாள் எஸ்பி இருவரும் ஆஜராகியிருந்தனர்.
இந்த நீதிமன்றம் இந்த வழக்கை நடத்தக்கூடாது
இந்த வழக்கை நடத்துவதற்கு விழுப்புரம் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விவாதம் நடைபெற்றது. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ”குற்றப்பத்திரிகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் செங்கல்பட்டு மாவட்டம் வரை குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்த நீதிமன்றம் இந்த வழக்கை நடத்தக்கூடாது. உளுந்தூர்பேட்டையில் தான் நடத்த வேண்டும்” என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ”நீங்கள் குறிப்பிட்டதை போல் உளுந்தூர்பேட்டைக்கும் தலைமை நீதிமன்றம் இந்த சிபிசிஐடி காவல்துறை தான்” என்று தெரிவித்தார்.
27ஆம் தேதி ஒத்திவைப்பு
மேலும் இது தொடர்பாக இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும், ஏற்கனவே அந்தப் பகுதி வழக்கை இதே நீதிமன்றம் தான் நடத்தி தீர்ப்பளித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். இந்நிலையில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கோபிநாத் வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : ’அனிதா மரணத்தின்போது இருந்த அதே மனநிலையில் இருக்கிறேன்’ - முதலமைச்சர் உருக்கம்!