விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய சந்திரகுமார் தற்பொழுது அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அங்கு உயர்நிலைப்பள்ளி வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் "கூல்லிப்" என்ற போதை வஸ்துக்களையும்; 11ஆம் வகுப்பு மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பதும் மாணவர்களின் செயல்பாடுகளை வைத்து கண்காணித்தபோது தலைமை ஆசிரியருக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தலைமையாசிரியர் விசாரணையில் இறங்கினார். அப்போது 11ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 11 பேர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது கண்டறிந்து, பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் மாணவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் கஞ்சா வியாபாரிகள் வந்து செல்லும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்த 11 மாணவர்கள் போதையில் மயங்கி கிடந்துள்ளனர். கஞ்சா வியாபாரிகள் சிலர் மீண்டும் மாணவர்களை மூளைச்சலவை செய்து கஞ்சாவை விற்பனை செய்துள்ளனர்.
மாணவர்கள் மயங்கி கிடந்த தகவலானது ஒன்றிய சேர்மன், உள்ளாட்சிப் பிரதிநிதி, தலைமை ஆசிரியர் மற்றும் போலீசாருக்கு ரகசியமாகத் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளைப் பார்த்ததும் சில மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அவர்களில் ஏழு மாணவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீண்டும் சமூக விரோதச்செயலில் ஈடுபடும் மாணவர்களைப் பள்ளியில் இருந்து நீக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு பள்ளியின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் கஞ்சா வியாபாரிகளை கூண்டோடு ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: அடுத்தாண்டுக்குள் விழுப்புரத்தில் புதிய மேம்பாலம்