தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, விழுப்புரம் அருகே உள்ள அயனம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்களின்றி மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாகனத்தையும், அதிலிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.