விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் இன்று(நவ.29) நடைபெற்றது.
இதில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "அதிமுக தொண்டர்கள் கழகத்தின் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்கள். தங்களது உழைப்பைக் கொடுத்து அதிமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வார்கள். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்க வேண்டும். அதிமுக கட்சியின் கரை வேட்டி கட்டி நடப்பதே ஒவ்வொரு தொண்டருக்கும் பெருமை. திமுக என்பது குடும்ப அரசியல் இயக்கம், அதிமுக தொண்டர்களுக்கான இயக்கம்.
மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நினைவாக்க மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலர தொண்டர்கள் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பான, எளிமையான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் மக்கள் அச்சம்மின்றி வாழ்கின்றனர். அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களுக்களை எளிதாக சென்றடைகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். அரசு அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மதிப்போடும், மரியாதையோடும் நடந்து கொள்பவர்கள் அதிமுகவினர்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுகின்றனர். இவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசு அலுவலர்களின் நிலைமை என்னவாகும். நாட்டு மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களை, பழங்குடி மக்களை தரக்குறைவாக பேசியவர் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி. இதுதான் திமுகவின் நிலை.
தமிழ்நாட்டு மாணவர்களின் நீட்தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி இட ஒதுக்கிடு பெற்றுத்தந்தது அதிமுக அரசு. அவர்களின் கல்விச் செலவை ஏற்றதும் அதிமுக அரசு தான்.
தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், நாம் இத்தனை ஆண்டு காலம் நாம் பட்ட கஷ்டங்கள் வீண் போய் விடும். இதற்கு தொண்டர்கள் இடம் கொடுக்கக்கூடாது. அதிமுகவைச் சேர்ந்த இளைஞர்கள் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இன்றே தேர்தல் பணியை தொடங்க வேண்டும். அதிமுக இயக்கம் இரட்டை இலைச் சின்னம் இவற்றினை மக்கள் மத்தியில் எடுத்துரைக்க இளைஞர்கள் தேர்தல் பணியாற்றிட வேண்டும். உங்களை நம்பித்தான் இந்த இயக்கம் இருக்கின்றது" என்றார்.
இதையும் படிங்க: பட்டியலின மக்கள் ஊருக்குள் செருப்பு போட்டு நடக்கத் தடை; சாலையை முள்வேலி போட்டு அடைத்து அராஜகம்!