விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பகுதியைச்சேர்ந்தவரின் மகள், கப்பியாம்புலியூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார்.
இந்நிலையில் மாணவியின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இதனால் அம்மாணவி தனது தந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு வருவதாக தன் தாயிடம் அடம்பிடித்தார் எனவும், வீட்டிலேயே இருக்க தாய் அறிவுறுத்தியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி நேற்று(ஜூலை 30) இரவு தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவ, மாணவிகள் தற்கொலை குறித்த தகவல்கள் தொடர்ந்து செய்திகளில் உலா வருகின்றன. இதுபோன்ற தற்கொலை மரணங்களைத்தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் நர்சிங் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை