டெல்லியிலுள்ள படேல் நகரைச் சேரந்தவர் நிதின் ஷர்மா (31). சமையல் கலை படிப்பை முடித்திருந்த இவர், கடந்த மாதம் புதுவைக்கு வேலை தேடி வந்திருந்தார். ஆனால் அவர் நினைத்தபடி வேலை எதுவும் கிடைக்காகதால் கையில் பணமின்றி தவித்துவந்துள்ளார். இதனிடையே அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததால் எங்கும் செல்ல முடியாமல் விழுப்புரத்தில் சுற்றித் திரிந்துள்ளார்.
இதனால் இவருக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவரை மீட்ட காவல் துறையினர் விழுப்புரம் கரோனா தடுப்பு சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறி சுகாதாரத் துறை அலுவலர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அவரை விடுவித்தனர். ஆனால் அடுத்த நாள் வெளியான அவரது ரத்த மாதிரி ஆய்வு முடிவில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டக் காவல் துறையினர் ஏழு தனிப்படைகள் அமைத்து கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அந்த இளைஞரைத் தேடி வருகின்றனர். மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் அந்த இளைஞர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர் மீது அரசின் 144 தடை உத்தரவை மீறி வெளியேறுதல், நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான வகையில் செயல்படுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.