சேலம் தளவாய்பட்டி அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (45). இவர் தனது குடும்பத்துடன் சென்னை மேடவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு தனது மனைவி இந்துமதி (40), மகன் முகிலன் (16), அவரது சகோதரன் செந்தில்நாதன் (47) ஆகியோருடன் சென்றுவிட்டு இன்று (பிப். 08) காரில் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தை கடக்கும் பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலத்த காயங்களுடன் செந்தில்நாதன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒலக்கூர் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மிகச்சிறிய செயற்கை கோள் செலுத்தி கின்னஸ் சாதனை முயற்சி: மாணவர்களுக்கு பாராட்டு!