விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த சின்ன கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (31). இவர் அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் வெட்டுக் காயத்துடன் கிடந்தார். அவரை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து செல்வகுமாரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு செல்வகுமார் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதன்பின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்வக்குமாரின் மைத்தினி லதா என்பவரை சின்ன கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (27) என்பவர் காதலித்து வந்துள்ளார்.
இதை அறிந்த செல்வகுமார், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லதாவை மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு நிச்சயம் செய்துக்கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குப்புசாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிபோதையிலிருந்த செல்வகுமாரை முந்திரி தோப்பில் வைத்து தலை, உடலில் பல பாகங்களில் பலமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த நிலையில்தான் படுகாயம் அடைந்த செல்வகுமாரை அப்பகுதி மக்கள் கண்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் தெரியவந்தது. தப்பியோடிய குப்புசாமி அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'வாழ வழியில்லை' - கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதி கோரி எஸ்பியிடம் மனு